கேள்வி – 03

கலாநிதி தீன்முகம்மத் (Al Azhari) Phd

கலாநிதி தீன்முகம்மத் (Al Azhari) Phd 

Vice Principal : Islamic University of Qatar

கேள்வி :
இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் பற்றி தெளிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமைக்கு காரணம் என்னவென்று கருதுகின்றீர்கள்?

 

பதில் :
தமது பூர்வீகத்தின் முக்கியத்துவத்தை இலங்கை முஸ்லிம் சமூகம் உணராமைதான் இவ்வாறான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமைக்குப் பிரதானமான காரணமாகும்.
இங்குள்ள ஒருசிலர் இவ்வாறான ஆய்வுகளைச் செய்ய வேண்டுமென நினைத்தாலும், அதை மேற்கொள்வதற்கான வசதிகள் அவர்களிடம் இல்லை. அந்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய அமைப்புக்களும் முஸ்லிம்கள் மத்தியில் மிகவும் குறைவாகவே உள்ளன.

அண்மைக் காலமாக சில அமைப்புக்களை வைத்துக் கொண்டு சிலர் இவ்வாறான ஆராய்ச்சிகளைச் செய்து வருவதாகக் கூறுகின்றார்கள். ஆனால், இவை – முஸ்லிம் சமூதாயம் பற்றிய பொதுவான ஆராய்ச்சியாக அமையவில்லை. சில தரப்புகளின் விருப்பு, வெறுப்புகளுக்கமைவாகவே இவை இடம்பெறுகின்றன.

இதேவேளை, பல்கலைக்கழகங்களிலும் தமது பட்டப்படிப்புக்காக மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கின்றனர். கிழக்கு மாகாண முஸ்லிம்களின் வரலாறு, அம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு என்பன போன்ற தலைப்புகளிளெல்லாம் அந்தக் கட்டுரைகள் அமைந்திருக்கின்றன.

இதேபோன்று, முஸ்லிம் கலாசாரத் திணைக்களம் தேசிய மீலாத் விழாக்களை நடத்துகின்றபோது, அந்த விழாக்கள் இடம்பெறும் பிராந்தியத்திலுள்ள முஸ்லிம்களின் வரலாறுகளையும் எழுதுகின்றனர்.

மேலும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் முஸ்லிம்களின் வரலாறு பற்றி எழுதியிருக்கின்றனர்.
ஆனால், இவை அனைத்துமே மீள – மீள ஒரே விடயத்தையே கூறிக்கொண்டிருக்கின்றன. அதாவது, எல்லோருக்கும் தெரிந்த தகவல்களையே இவர்கள் எல்லோரும் திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.

அமெரிக்காவில் டெனில்ஸ் எனும் பெயரில் எனது நண்பர் ஒருவர் இருக்கின்றார். அவர் கொலராடோ பல்கலைக்கழகத்தின் மனிதவியல் துறைப் பேராசிரியர். அவருக்கு இலங்கை முஸ்லிம் தொடர்பாக நிறைய ஈடுபாடு உள்ளது. அவருடைய கலாநிதிப்பட்டத்துக்காக எழுதிய ஆய்வுக்கட்டுரை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்கள் பற்றியதாகும். 70 களின் ஆரம்பத்தில் அதை எழுதினார்.

தனது ஆய்வுக் கட்டுரையை எழுதியதிலிருந்து – இரண்டு மூன்று வருடங்களுக்கொருமுறை பேராசிரியர் டெனிஸ் இலங்கைக்கு வந்து செல்கின்றார். அவர் ஆய்வுக் கட்டுரை எழுதும் போது கிழக்கு முஸ்லிம்கள் இருந்த நிலைக்கும், அதன் பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்குமிடையிலான தகவல்களை அவர் தனது ஆராய்ச்சியில் புதிது, புதிதாகச் சேர்த்துக் கொள்வதற்காகவே இங்கு வருகிறார்.

இப்படி – இவர்களிடமுள்ள அறிவுக்கான தேடல், இலங்கை முஸ்லிம்களிடத்தில் இல்லை! அவ்வாறு ஒரு சிலர் இங்கு முயற்சி செய்தாலும், வெளிநாடுகளில் அறிவு ஆராய்ச்சிகளுக்காக நிதி வழங்கும் – பொது அமைப்புக்கள் போலானவை இங்கு மிக மிகக் குறைவு!

இலங்கை முஸ்லிம்கள் தொடர்பாக இங்கு எழுதப்பட்டுள்ள நூல்களில் – பல வரலாற்றுப் பிழைகள் காணப்படுகின்றன. அவைகளைக் கூட, மீளாய்வு செய்யத் தெரியாதவர்களாக இங்குள்ளவர்கள் இருக்கின்றார்கள்.

உதாரணமாக, கலாநிதி சுக்ரி எழுதியுள்ள ‘இலங்கை முஸ்லிம்கள்’ (Muslims of Sri lanka) நூலிலும் சில தகவல்கள் பிழையாக எழுதப்பட்டுள்ளன. அந்தப் பிழைகளை சுமார் 12 வருடங்களுக்கு முன்னர் கலாநிதி சுக்ரியிடம் நான் சுட்டிக் காட்டியதோடு, அவைகளைத் திருத்துமாறும், அந்தத் திருத்தங்கள் குறித்து பத்திரிகையில் கட்டுரையொன்றை எழுதுமாறும் வேண்டியிருந்தேன். ஆனால், இன்றுவரை கலாநிதி சுக்ரி அந்தப் பிழைகளைத் திருத்தவேயில்லை. நமது புத்திஜீவிகள்; கூட, எங்கள் வரலாறு தொடர்பில் இப்படித்தான் இருக்கின்றார்கள்!

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது – இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றினை ஆய்வு செய்வதற்கானதொரு நிலையமாகவும் இதைப் பயன்படுத்தலாம் என்கிற நம்பிக்கை பலரிடம் இருந்தது. ஆனால், அது நிறைவேறவில்லை.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அரசியலும், கல்விக்கு அப்பாலான ஏனைய பல விடயங்களும் ஊடுருவியுள்ளதால் அந்தப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி மிகவும் தடைப்பட்டுப் போயுள்ளது. இதனால், மேற்சொன்னவாறான ஆய்வுகளை அங்கு நடத்த முடியாமலுள்ளது!

எவ்வாறிருந்தபோதும், இலங்கை முஸ்லிம்களின் வரலாறு தொடர்பில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் – காத்திரமான ஆய்வுகளை மேற்கொள்ளும் என்கிற நம்பிக்கை இன்னும் நம்மிடம் இருக்கவே செய்கிறது. அவ்வாறான ஆய்வுகளை மேற்கொள்ளப் பொருத்தமான பல்கலைக்கழகம் இதுதான். எனவே அதற்கான முயற்சிகளை தெ.கி.பல்கலைக்கழகம் மேற்கொள்ள வேண்டும்!

நன்றி
ஸுன்னத் வல் ஜமாஅத் online Dawah Service

Powered By Indic IME