கேள்வி – 01

கலாநிதி தீன்முகம்மத் (Al Azhari) Phd

கலாநிதி தீன்முகம்மத் (Al Azhari) Phd 

Vice Principal : Islamic University of Qatar

கேள்வி :

இஸ்லாமியக் கலாசாரம், அரேபியக் கலாசாரம், சோனகக் கலாசாரம் ஆகியவற்றில் – இலங்கை முஸ்லிம்கள் எதனூடாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என கருதுகின்றீர்கள்?

பதில் :

இது புதிதாகத் தோன்றியுள்ளதொரு பிரச்சினையென்று நான் நினைக்கின்றேன்! அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் சில நிகழ்வுகள்தான் இந்தக் கேள்வியை உருவாக்கியிருக்கின்றது.
நீங்கள் ஒரு இலங்கையர் என்றால், இலங்கையராகவே இருக்க வேண்டும். அதில் மாற்றங்களில்லை. அப்படியென்றால், நாம் இலங்கை முஸ்லிமாக அல்லது சோனகராகத்தான் வாழ வேண்டும். அற்குரிய கலாசாரங்களைத்தான் பின்பற்ற வேண்டும்.

ஆனால், நம்மில் சிலருக்கு – எது எந்தக் கலாசாரம் என்றே தெரியாது.

உதாரணமாக, இஸ்லாமியக் கலாசாரம் என்று நினைத்துக் கொண்டு, சில பெண்கள் தமது முகத்தையும், உடலையும் முழுவதுமாக மூடி ஆடை அணிகின்றார்கள். ஆனால், அது இஸ்லாமிய ஆடைக் கலாசாரமல்ல. அதேவேளை, அரேபியக் கலாசாரமுமல்ல. அது ஜாஹிலியாக் (இஸ்லாத்துக்கு முற்பட்ட அறிவிலிகளின்) கலாசாரமாகும்! பெண்ணுக்கு மரியாதை இல்லாத அந்தக் காலத்தில், அவர்களின் முகத்தை மறைத்து அப்போது மூடி வைத்திருந்தார்கள்.
ஆனால், துரதிஸ்டவசமாக முகத்தை மூடும் அந்த ஆடைக் கலாசாரத்தை – அரபிகளும், அரபிகளைப் பார்த்து ஏனைய நாட்டு முஸ்லிம்கள் சிலரும் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இஸ்லாத்தில் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டுமென்றுதான் கூறப்பட்டுள்ளது. அதாவது, தலையை மூடி, நாகரீகமாக ஆடையணிய வேண்டும். ஆனால், முகத்தை மூடி ஆடை அணிய வேண்டுமென்று ஒரு பெண் விரும்பினால், அதற்கு இஸ்லாம் எதிர்ப்பானதல்ல!

எவ்வாறிருப்பினும், ஒருவர் – அவரது நாட்டின் கலாசாரத்தை பின்பற்றுவதே பொருத்தமானதாகும். நபிகள் நாயகம் இலங்கையில் பிறந்திருந்தால், அவர்கள் சாரம்தான் உடுத்திருப்பார்கள். ஆனால், இங்கு சில முஸ்லிம்கள் – அரேபியரின் ‘ஜுப்பா’ என்கிற ஆடை வகைகளை உடுத்துக் கொண்டு திரிகின்றார்கள். ‘ஜுப்பா’ என்பதை நம்மவர்கள் – இஸ்லாமிய ஆடைக் கலாசாரம் என்று பிழையாக விளங்கியும் வைத்துள்ளார்கள்.

ஆக, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் இலங்கை முஸ்லிம்களாகத்தான் இருக்க வேண்டும். இலங்கை முஸ்லிம்களுக்கான கலாசாரங்களினூடாகத்தான் நம்மை – நாம் அடையாளப்படுத்தவும் வேண்டும்.

நன்றி
ஸுன்னத் வல் ஜமாஅத் online Dawah Service

Powered By Indic IME