கேள்வி – 04

 
கலாநிதி தீன்முகம்மத் (Al Azhari) Phd
கலாநிதி தீன்முகம்மத் (Al Azhari) Phd
Vice Principal : Islamic University of Qatar

கேள்வி :
இறை காதலுக்கும் – சூபித்துவத்துக்குமிடையிலான உறவு பற்றிப் பேசுங்களேன்! சூபித்துவம் என்பது – பௌத்த, கிரேக்க அல்லது கிறிஸ்தவ தத்துவங்களின் வெளிப்பாடு என்றும் ஒரு விமர்சனம் உள்ளதே?

பதில் :
இந்த விமர்சனங்களுக்கெல்லாம் பதில் கொடுப்பதற்காகத்தான் ‘இறை காதல்’ என்கிற தலைப்பில் எனது கலாநிதிப் பட்டத்துக்கான ஆய்வுக் கட்டுரையை எழுதி முடித்தேன்.

சூபித்துவம் என்பதை கிரேக்க, பௌத்த அல்லது கிறிஸ்தவ தத்துவங்களின் வெளிப்பாடு என்று சொல்பவர்கள் எத்தனை கலாநிதிப் பட்டங்களை வைத்திருந்தாலும் பரவாயில்லை – அவர்களை முட்டாள்கள் என்றுதான் நான் கூறுவேன்.கிரேக்க அல்லது பௌத்தம் போன்ற தத்துவங்களிலிருந்துதான் சூபித்துவம் உருவானதாகக் கூறுபவர்களில் அதிகமானோருக்கு அவர்கள் கூறுகின்ற தத்துவங்கள் பற்றியே தெரியாது.

இஸ்லாத்தின் அடிப்படையே இறை காதல்தான். இஸ்லாமிய வாழ்க்கை முறை இறை காதலின் அடிப்படையில்தான் அமைய வேண்டுமென்று குர்ஆன் கூறுகிறது. இதை நடைமுறைப் படுத்துகின்றவர்கள் சூபிகள்! அதனால்தான் இறை காதலைப் பற்றி சூபிகள் அதிகமாகப் பேசுகின்றனர்.

மனிதனை ஒரு போதும் சட்டத்தால் மாற்றிவிட முடியாது. ஆனால், அன்பால் மாற்றி விடலாம். உதாரணமாக, விபச்சாரம் செய்தால் சவூதி போன்ற நாடுகளில் கசையடி வழங்குவார்கள் அல்லது கல்லெறிந்து கொன்று விடுவார்கள். ஆனால், அங்குள்ளவர்கள் என்ன செய்கின்றார்கள்.

சவூதியிலிருந்து புறப்பட்டு வெளிநாடுகளுக்குச் சென்று நிறையக் காசைச் செலவு செய்து தமது உடல் இச்சையை நிறைவு செய்து விட்டு – நாடு திரும்புகின்றார்கள். ஆக, சட்டத்தால் ஆட்களைத் திருத்த முடிகிறதா? இல்லை!

சட்டத்தில் எப்போதும் ஓட்டை இருக்கும். எனவே சட்டத்தை மேவி குற்றமிழைத்து விடக்கூடிய சந்தர்ப்பங்களிலெல்லாம் பலர் – அதைச் செய்து விடுகின்றனர்.

ஆனால், அன்பினால் ஒருவரை மாற்றி விட முடியும். ஏன் – அன்பிருந்தால் உங்களையே உங்களால் மாற்றி விட முடியும்!

ஒருவருடன் நீங்கள் காதல் நிலையிலிருந்தால், அவருக்காக எதையும் தியாகம் செய்வதற்கு நீங்கள் தயாராகவே இருப்பீர்களல்லவா! இறை காதலும் இப்படித்தான்!

அல்லாமா இக்பால் சொல்லியிருக்கின்றார் – காதல்தான் அல்லாவுடைய தூதன் என்று!

அல்லாஹ் மீதான காதல் உங்களிடம் இல்லையென்றால், இஸ்லாத்தை நீங்கள் ஒழுங்காகப் பின்பற்றவே மாட்டீர்கள். ஆக – இறைகாதல் இல்லாத இடத்தில் இஸ்லாம் இல்லை!

இறைகாதலுக்கும் – சூபித்துவத்துக்குமிடையிலான உறவு இதுதான்!

மக்களிடம் இறைகாதல் இல்லாமல் போகும் நிலை வந்து விடுமோ என்பதற்காகத்தான் சூபிகள் வெளியாகி, மக்களின் வாழ்க்கை இப்படித்தான் அமைய வேண்டும் என்பதை காட்டி நிற்கின்றார்கள்.

ஆனால், சில மேற்குதேச சிந்தனையாளர்கள் சூபித்துவத்தை – வேறு தத்துவங்களிலிருந்து பெறப்பட்ட ஒன்றாகச் சித்தரிக்க முயற்சி செய்கின்றார்கள்.

இஸ்லாம் என்பதை – கத்தியும், ரத்தமும், கொலைகளும் நிறைந்ததொரு மார்க்கமாகக்; காட்டுவதையே அவர்கள் விரும்புகின்றார்கள். எனவே, அன்பையும், காதலையும் பற்றி இஸ்லாம் பேசுவதை அவர்களால் பொறுக்க முடியாது. ஆதனால்தான் சூபித்துவத்தை – கிறிஸ்தவத்திருந்தும் வேறு தத்துவங்களிலிருந்தும் பெறப்பட்டதொன்றாகச் சொல்கின்றார்கள்.

உண்மையாகச் சொன்னால், கிறிஸ்தவத்தில் இறைகாதல் என்பதே இல்லை! கிறிஸ்தவ ஞானிகள் இறைகாதலைப் பற்றிப் பேச ஆரம்பித்ததே கடந்த 800 ஆண்டுகளுக்குள்ளாகத்தான்!

அதாவது முஸ்லிம் சூபிகள் வெளியாகி 400 வருடங்களின் பின்புதான் கிறிஸ்தவர்களுக்குள் இப்படிப்பட்ட சிந்தனைகள் வெளிப்பட்டிருந்தன!

இவைகளையெல்லாம் – எனது கலாநிதிப்பட்டத்துக்கான ஆய்வில் மிகத் தெளிவாக விளக்கி, நிரூபித்துள்ளேன். மேலும், இது குறித்து விவாதிக்கவும் நான் தயாராக உள்ளேன்!
நன்றி
ஸுன்னத் வல் ஜமாஅத் online Dawah Service.

Powered By Indic IME