மஹர் கொடுத்து மணம் முடியுங்கள்

மஹர் அல்லாஹ் ஆணையிடுகின்றான்

நீங்கள் (மணம் புரியும்) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை) மகிழ்வோடு கொடுத்துவிடுங்கள். அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்குக் கொடுத்தால் அதை தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள். (அல்குர்ஆன் 4:4)

மணம் முடிக்கும் மணப்பெண்ணுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படி கொடுத்து விடுங்கள். (அல்குர்ஆன் 4:24,25)

மணம் முடிக்கும் பெண்ணுக்கு ஒரு பொற்குவியலையே (மஹராக) கொடுத்த போதிலும், அதிலிருந்து எதனையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன் 4:20)

நபி அவர்கள் வாழ்ந்த போது, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) என்ற நபித்தோழர் பேரித்தம் பழமளவு தங்கத்தை மஹராகக் கொடுத்து ஒரு மதீனத்து பெண்ணை மண முடித்தார்கள். அறிவிப்பு: அனஸ் பின் மாலிக் (ரலி).

ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ, தாரமி..

ஒரு இரும்பு மோதிரத்தையாவது மணப்பெண்ணுக்கு மஹராகக் கொடுத்து மணம் முடியுங்கள் என நபி அவர்கள் எங்களுக்கு ஆணையிட்டார்கள் (ஹதீஸின் சுருக்கம்) அறிவிப்பு: ஸஹல் பின் ஸஅத் (ரலி)

ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ, தாரமி, திர்மிதி

ஒரு நபித் தோழரிடம் மஹராகக் கொடுக்க எந்த பொருளும் இல்லாததை அறிந்த ரசூல் அவர்கள் “உனக்கு எதாவது திருக்குர்ஆன் வசனங்கள் தெரியுமா? எனக் கேட்டார்கள். அந்நபித்தோழர், தனக்கு இன்னின்ன குர்ஆன் வசனங்கள் தெரியுமென விடையளித்தார்கள். உடனே அந்த வசனங்களை மணப்பெண்ணுக்கு கற்றுக் கொடுப்பாயாக! அது அப்பெண்ணுக்குரிய மஹராகும்” என்றார்கள்.

அறிவிப்பு: ஸஹல் பின் ஸஅத் (ரலி)

ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ, தாரமி, திர்மிதி

போர் கைதியாக பிடிக்கப்பட்ட ஸஃபிய்யா என்ற யூதப் பெண்ணை நபி அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்களை போர் கைதியிலிருந்து விடுவித்தலே அவருக்கான மஹராக இருந்தது.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

ஆதாரங்கள் : புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ, திர்மிதி..

மஹர் – திருமணக்கொடை – மணப்பெண்ணின் தனி உரிமை. அதில் தலையிடவோ, அதற்கு வரையறையிடவோ எவருக்கும் உரிமையில்லை. ஒரு மணப்பெண் ஒரு பொற்குவியலைக் கூட தனக்கு மஹராக கேட்க உரிமையுண்டு. (பார்க்க: அல்குர்ஆன் 4:20)

திருமணத்தின் குறிக்கோள் 

திருமணத்தில் இணையும் ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் தங்களது இயற்கையான உடல் தாகங்களை (அனுமதிக்கப்பட்ட முறையில்) செம்மையாக பகிர்ந்து கொள்வது இஸ்லாமிய திருமணத்தின் முக்கிய குறிக்கோளாகும் என நபி அவர்கள் உணர்த்தினார்கள்.

அறிவிப்பு: உக்பா பின் ஆமிர் (ரலி)

ஆதாரங்கள் : புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ

Powered By Indic IME