தஜ்ஜால்

தஜ்ஜால் ஒரு வரலாற்றுப் பார்வை

தஜ்ஜால் என்பவன் இறுதிக் காலப் பிரிவில் தோன்றும் ஒரு மனிதன். அசத்தியத்தை சத்தியம்போன்று காட்டுவதில் அதி பாரிய சக்தி கொண்டவன். அவன் தஜ்ஜால் என அழைக்கப்படக்காரணம் அதுவே.

ஏனெனில் தஜ்ஜால் என்ற சொல்லின் மொழிப்பொருள் அசத்தியத்தை சத்தியமாகக் காட்டும் பாரிய திறமை மிக்கவன். பொய்யும் புரட்டும் நிறைந்தவன் என்பதாகும். இத்தைகைய விஷேட திறமைகளும், அற்புதங்கள் பலவற்றை நிகழ்த்தும் ஆற்றல் கொண்ட அவன் மக்களை வழிகெடுப்பான்.

தஜ்ஜாலின் மூலம் இறைவன் முஃமீன்களுக்கு ஏற்படுத்தும் சோதனை கடுமையாக இருக்கும். இவன் யூத இனத்தைச் சார்ந்தவன். இறுதியில் நபியுல்லாஹ் ஈஸா அலைஹிஸ்ஸலாமவர்களால் ஃபலஸ்தீனத்தில் வைத்துக் கொலை செய்யப்படுவான்.

யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் வெளிக்கிளம்புவதற்கு முன்னதாக தஜ்ஜால் புறப்பட்டு வருவான். தஜ்ஜாலைப்பற்றி நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஆலிஹி வஸல்லிம் அவர்கள் ஏராளமான செய்திகளை கூறியுள்ளார்கள்.

தஜ்ஜால் குழப்பவாதிகளின் தலைவன்.

இனி புதிதாக பிறப்பவன் அல்லன். இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். எங்கே என்ற கேள்விக்கு ஓரளவிற்கு ஹதீஸ்களில் பதில்கள் கிடைக்கவே செய்கின்றன.

அன்றைய அரபு மக்கள் தங்கள் வியாபாரத் தொடர்பாக தரை மார்க்கமாக சீனா, இந்தோனேஷியா, மலேஷியா, மாலத்தீவு, இலங்கை, இந்தியா வரையிலும் சென்று வந்தனர்.

முன்பு கிருஸ்தவராக இருந்த நபித்தோழர் ஹழ்ரத் தமீமுத் தாரி ரழியல்லாஹூ அன்ஹூ அன்னவர்கள் 30 நபர்களுடன் புயலில் சிக்கி ஒரு தீபகற்பத்தில் கப்பலோடு ஒதுங்கினார்.

அப்பொழுது ஜஸ்ஸாஸா என்றதொரு பிராணி அவர்களிடம் நீங்கள் இந்த மடத்திலுள்ள மனிதனிடம் செல்லுங்கள் என்று கூறியது. அங்கு அவர்கள் ஒரு பருமனான மனிதனைக் கண்டார்கள். அவனைப்போன்று ஒரு படைப்பை நாங்கள் ஒருபோதும் கண்டதில்லை. இரண்டு கரண்டை கால்களும், முட்டுக் கால்களும் தலையுடன் சேர்த்து இரும்பினால் கட்டப்பட்டிருந்தான். பின்பு அவன் சில கேள்விகள் கேட்டான். இறுதியில் நான் தான் தஜ்ஜாலாவேன்.

வெளியேற விரைவில் அனுமதி வழங்கப்படலாம் என்று கூறியதாக, நபித்தோழர் ஹழ்ரத் தமீமுத் தாரி ரழியல்லாஹூ அன்ஹூ அன்னவர்கள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஆலிஹி வஸல்லிம் அவர்களிடம் கூறினர்.

இதனைக்கேட்ட அண்ணலார் அவர்கள், இவ்விஷயத்தை முன்பே நான் உங்களிடம் கூறியிருக்கின்றேன் அல்லவா? என்று மக்களிடம் கேட்டார்கள். மக்கள் ஆம் என்றனர்.

அறிந்து கொள்க! நிச்சயம் அவன் ஷாம் நாட்டின் கடல் பகுதியில் இருக்கிறான். அல்லது யமன் நாட்டின் கடல் பகுதியில் இருக்கிறான் என மும்முறை கூறினார்கள்.

(முஸ்லிம்)

தஜ்ஜால் கடலில் உள்ள தீவுக்குள் தனி மடாலத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளதாக இரண்டாவது தொடரில் குறிப்பிட்ட ஹதீஸ் கூறுகிறது.

எமன் கடல், ஷாம் (சிரியாக்) கடல் பகுதி எல்லாம் மக்களால் அறியப்பட்ட பிரதேசங்கள். மேலும் இங்கு தீவுக்கூட்டங்கள் அதிகம் இல்லை.

ஆனால் அண்ணலார் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஆலிஹி வஸல்லிம் அவர்கள் தஜ்ஜால் வருவதாகக் குறிப்பிட்ட திசையான கிழக்குத் திசையின் கடல் பகுதியில் ஏராளமான தீவுகளும், தீபகற்பங்களும் உள்ளன.

இந்தோனேஷியாவில் உள்ள மொத்த தீவுகள்13667. இதில் மனிதர்கள் வசிக்காத அடர்ந்த காடுகள் உள்ள தீவுகள் மட்டும் 6000க்கும் மேல். அதைத் தொடந்துள்ள நமது அந்தமான் தீவுக்கூட்டங்கள் மனிதர்கள் எவரும் வசிக்காத தீவுகள் 265. மாலத்தீவில் மொத்தம் 2000.

இதில் மனித நடமாட்டம் உள்ள தீவுகள் 199 மட்டுமே. ஆக ஏராளமாக தீவுகள் மனிதப் பார்வையில் படாமல் உள்ளன.

ஆகையால், கொடியவன் தஜ்ஜால் வருகின்றபொழுது மக்கள் நிலை எவ்வாறிருக்கும்?.

வழிகெடுக்கக்கூடிய தஜ்ஜால் என்னும் ஒற்றைக் கண்ணன் மக்கள் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் காலத்தில் தோன்றுவான் என்ற நபிமொழி அஹ்மதில் பதிவாகியிருக்கிறது.

தஜ்ஜாலின் வருகைக்கு முன் வரும் அவனது வாரிசுகள் யார்? எவ்வாறான குழப்பம்?
அந்தக் குழப்பத்திற்கும் இவனுக்கும் என்ன தொடர்பு?
ஏன் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கவேண்டும்.
லௌஹீக குழப்பத்தைப்பற்றி இங்கு நாம் பேசவ்ரவில்லை. அதுவொரு குழப்பமே அல்ல.

அப்படியென்றால் அவன் வரும்பொழுதும் மக்கள் ஏற்கனவே ஆத்மீகக் குழப்பத்தில் ஆழ்ந்தவர்களாக இருப்பார்கள் என்பது புரிகிறது.

யுக முடிவு நாளுக்கான அடையாளங்களில் எத்தனையோ லௌஹீக பிரச்சனைகள் ஏற்படும் என்பது உண்மை. ஆனால் ஆத்மீகப்பிரச்சனை தஜ்ஜாலின் மூலம் மட்டுமே ஏற்படும்.

ஆனால், முஸ்னத் அஹ்மதில் பதிவாகியிருக்கும் மேற்சொன்ன நபிமொழியோ தஜ்ஜாலின் வருகைக்கு முன்னரும் மக்கள் ஆத்மீக குழப்பத்தில் ஆழ்ந்து போயிருப்பார்கள் என்று சொல்கினறதே?!!!

அந்த குழப்பவாதிகள் யார்? என்ற கேள்விக்கு பதில் தேடும் முன்னர், இறுதி தஜ்ஜால் வருவதன் நோக்கம் என்னாவாக இருக்கும் என்பதைப் பார்த்துவிடுவோம்.

தஜ்ஜால் வருகையின் முக்கிய நோக்கம்:

1. தன்னைக் கடவுள் என்று வாதிடுவான்.

ஓர் இஸ்லாமியன் எவ்வளவுதான் பெரும் பாவங்களை செய்துகொண்டிருந்தாலும் , அவனை மதமாற்றுவதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. எவ்வளவுதான் கெட்ட கொடியவனாக இருந்தாலும், இஸ்லாம் மார்க்கத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டான். அப்படிப்பட்ட இஸ்லாமியர்கள் , தஜ்ஜாலின் வலைக்குள் சிக்கிவிடுவது எவ்வாறு சாத்தியமாகும்?

நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டு ஸலாம் சொன்னாலே ஜீரணிக்காத இஸ்லாமியன் நெற்றியில் காஃபிர் என்று தெளிவாக எழுதப்பட்டிருக்கும் ஒருவனை எவ்வாறு கடவுளாக ஏற்றுக்கொள்ள துணிவான்? நான் அல்லாஹ் என்று வாதிடும் ஒருவனை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றால் அதற்கான் வழிகள் ஏற்கனவே திறந்துவிடப் பட்டிருக்கவேண்டும்.

அல்லாஹ்வின் நாட்டப்படி இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தஜ்ஜால் திடீரென்று வெளியாகியவுடன் நான் கடவுள் என்று சொல்வதை ஒரு இஸ்லாமியன் ஏற்றுக்கொள்வதானால் அந்த இஸ்லாமியன் ஏற்கனவே குழப்பத்தில் விழுந்தவனாக இருக்க வேண்டும்.

அல்லாஹ் பற்றிய தவறான விளக்கத்தில் சிக்குண்டவனாக இருந்திருக்கவேண்டும். இஸ்லாத்தின் மார்க்கவிஷயங்களை மக்களின் மத்தியிலே குழப்பியிருக்க வேண்டும்.

அதனால்தான் இறுதியாக தஜ்ஜால் வரும்பொழுது மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருப்பார்கள், என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஆலிஹி வஸல்லிம் முன்னெச்சரிக்கை செய்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

2. தஜ்ஜாலின் அடுத்த இலக்கு மதினாவை நோக்கி.

தஜ்ஜாலின் வருகையின் நோக்கங்களில் அடுத்தது மதீனாவை நோக்கி இருக்கும் (புஹாரி 7133) அப்பொழுது அமரர்கள் அவனை அதற்குள் நுழையவிடாது ஷாம் தேசத்தின் பக்கம் திருப்பிவிடுவார்கள்.என்றதொரு நபிமொழியும் பதிவாகியிருக்கிறது.

தஜ்ஜால் எதற்காக மதீனாவை நோக்கிச் செல்லவேண்டும்? அவ்வாறு செல்பவனை அமரர்கள் எதற்காக ஷாம் தேஷத்தின் பக்கம் திருப்பி விடவேண்டும்? அவன் எதனை அசுத்தப்படுத்த நினைக்கின்றானோ அதற்கான வைத்தியம் சிரியாவில் இருக்கிறது, அதாவது அவனிடமுள்ள மதீனா பற்றிய தீய கொள்கைகளை திருத்தி ஈமானைப் புதிப்பிக்க வல்லவர்கள் ஷாம் தேஷத்தில் இருக்கிறார்கள். எனவே மதீனாவை விளங்கவேண்டுமானால் ஷாம் (சிரியா) தேஷத்திற்கு செல்லவேண்டும். அங்கு தான் அதற்கான வைத்தியர்கள் இருக்கிறார்கள் என்று அந்த நபி மொழி கூறுகின்றது.

அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவிக்கின்றார்கள்,

“வலிமார்கள் ஷாமில் (சிரியா) இருக்கின்றார்கள்” (அல் ஹதீத் தபரானி கபீர் 1039)

ஷாம் என்பது சிரியா, லெபனான், ஃபலஸ்தீன் போன்ற நாடுகளை உள்ளடக்கிய பிரதேசமாகும். எனவே மதீனாவின் மகத்துவத்தை வலிமார்கள் அறிந்திருக்கிறார்கள். ஆகவே வலிமார்களின் தரிசனம் பெற்றிட முயற்சி செய்யுங்கள். உங்கள் தொடர்பை அல்லாஹ்வின் நேசர்களுடன் வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுதான் நம்முடைய ஈமானை, தஜ்ஜால்களின் கூட்டத்தார்கள் செய்யும் குழப்பத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

மாமன்னர் முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஆலிஹி வஸல்லிம் அவர்கள் வாழும் பூமியில் நயவஞ்சகர்ள் நுழைவதற்கு தடை என்பதால் தஜ்ஜாலும் , அவனது கூட்டத்தாரும், வலிமார்கள் காலடியில் தங்களை மாய்த்துகொள்ள ஷாம் நோக்கி விரட்டப்ப்டுகிறார்கள்.

இறைநேசர்களை பகைப்பவன் அல்லாஹ்வுடன் போர் தொடுக்கிறான்.

தஜ்ஜால் ஒருவனல்ல:

“ஏறத்தாழ 30 தஜ்ஜால்கள் வெளியாகுவார்கள். அவர்களெல்லாம் தம்மை இறைத்தூதர் என்று வாதிடுவார்கள்” (புஹாரி 3609,7121)

இவர்களெல்லாம் உண்மையான தஜ்ஜால்கள் அல்ல, பொய்யர்கள், தஜ்ஜாலின் பிரதிநிதிகள். இவர்கள் மக்களை மார்க்கத்தில் பொய்யையும், புரட்டையும் புகுத்தி அப்பாவி மக்களை தங்கள் பேச்சுத்திறமையால் வழிகெடுத்து, தன்னை பின்பற்றச்செய்து விடுவார்கள்.

இவர்கள் தன்னைத்தானே நபி என்று சொல்லவைக்கும் அளவிற்கு, நபிமார்களை பற்றி தரக்குறைவாகப் பேசுவார்கள்.

அதற்காக நபியை தன்னைப் போன்ற மனிதன் தான் என்று கூறுவார்கள்.

நபியின் மகத்துவத்தைப்பற்றிச் சொல்பவர்களையெல்லாம் அல்லாஹ்விற்கு இணைவைப்பவர்களாக பிரச்சாரம் செய்வார்கள்.

அல்லாஹ்விற்கு உருவம், வடிவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.

நாங்கள் கூறுவதுதான் சரி என்று சொலவார்கள்.

நாங்கள் மட்டும் தான் சொர்க்கம் செல்பவர்கள் என்று கூறி, தங்கள் முன்னோர்களையெல்லாம் நரகவாதியாக்குவார்கள்.

இவர்களது தவறான பிரச்சாரத்தால் மக்களெல்லாம் ஆழ்ந்துபோயிருக்கும் தருணத்தில் உண்மையான தஜ்ஜால் வந்து விடுவான், உடனே கண்மூடித்தனமாக மார்க்கத்தை தஜ்ஜாலின் வழியில் பின்பற்றியவர்கள் அவனது பின்னால் சென்று விடுவார்கள்.

தஜ்ஜாலை அதிகம் பின்பற்றுவோர் யார்?

மக்களை ஏமாற்றும் எவரும் தங்களுடைய பிரச்சாரங்களை பெண்களிடமிருந்தே துவங்குகின்றனர். தங்களின் மீது பெண்களுக்கு உறுதியான நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக சில போலி விளம்பரங்களையும், பொய்யான வாக்குறுதிகளையும் கூறி பெண்களை நம்ப வைக்கின்றனர்.

இதே வழிமுறையைத்தான் தஜ்ஜாலும் கையாளுவான். அதிகமான பெண்கள் அவனை பின்பற்றி செல்வார்கள். ஆண்கள் வாயிலாக சாதிக்க முடியாததை பெண்கள் வாயிலாக சாதித்து விடலாம்.

“உவர் நிலங்களுக்கு தஜ்ஜால் புறப்பட்டு வருவான். அப்பொழுது அதிகமான பெண்கள் அவனைப் பின்பற்றிச் செல்வார்கள். எந்த அளவிற்கென்றால் அன்று ஒவ்வொரு ஆணும் தனது மனைவி, தாய், மகள், சகோதரி, மாமி ஆகியோரிடம் சென்று அவர்கள் தஜ்ஜாலை பின்பற்றி சென்றுவிடக்கூடாது என அஞ்சி அவர்க்ளை கயிற்றினால் கட்டிவைப்பான் ” என்று முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஆலிஹி வஸல்லிம் அவர்கள் கூறினார்கள்.( மஜ்மஉஸ் ஸவாயித் 7-346. அஹ்மத்)

தஜ்ஜாலின் அற்புதங்கள்

தஜ்ஜால் அவன் தன்னுடன் நீர்(சொர்க்கம்) மற்றும் நெருப்பு(நரகம்) போன்றதைக் கொண்டு வருவான்.

அவன் எதை நீர் என்று கூறுவானோ அதுதான் உண்மையில் நெருப்பாக இருக்கும். இன்னும் அவனுடன் நீரும் நெருப்பும் இருக்கும். மக்களுக்கு நீராகக் காட்சி தருவது கரிக்கும் நெருப்புக்கும். மக்களுக்கு நெருப்பாக காட்சி தருவது குளிரான சுவை நீராகும்.

உங்களில் யார் அந்த இடத்தை அடைகிறாரோ அவர் நெருப்பாக காட்சியளிப்பதில் விழட்டும். ஏனெனில் அது நல்ல சுவை நீராகும்… என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஆலிஹி வஸல்லிம் அவர்கள் கூறினார்கள்.( புஹாரி 3450, 7031)

இன்றைய தஜ்ஜால்கள், சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் கொள்கை விளக்கம் என்று அவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் அவர்கள் நரகத்திற்கு அழைத்துச் செல்லும் வழிகெட்ட கொள்கைகளாகும்.

எந்த கருத்துக்களை அவர்கள் நரகத்திற்கு அழைத்துச் செல்லும் கருத்துக்கள் என்று மக்களிடம் சொல்கிறார்களோ அதுதான் உண்மையில் சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் கருத்துக்கள் எனபதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்.;

தஜ்ஜால் நுழையாத இடங்கள்

மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இருக்காது. அவைகளின் ஒவ்வொரு நுழை வாயிலிலும் வானவர்கள் அணிவகுத்து அவனைத் தடுப்பவர்களாக இருப்பார்கள் என்று புஹாரி, முஸ்லிமில் பதிவாகியிருக்கையில் தஜ்ஜாலின் சஹாக்கள் மட்டும் தற்பொழுது அவ்விரு நகரங்களிலிருந்து எவ்வாறு போதனை செய்ய முடிந்தது என்று உங்கள் உள்ளத்தில் கேள்வி எழுவதை நாம் பார்க்கின்றோம். இதோ பதில்,

மக்கா, மதீனா ஆகிய இரு நகரங்களுக்கும் அவனால் நுழைய முடியாதென்றால் அவ்விரு நகரங்களின் மகத்துவம் குடிகொண்டிருக்கும் உள்ளம் எனும் நகரத்தில் அவனால் கால் வைக்கமுடியாதென்பது அதன் அர்த்தமாகும். இன்னும் சொல்வதாயின் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஆலிஹி வஸல்லிம் அவர்களின் பிறப்பினதும், மறைவினதும் யதார்த்தம் நிறைந்த உள்ளங்களில் அவனை நுழையவிடாது வானவர்கள் அணிவகுத்து அவனைத் தடுக்கின்றார்கள் என்பதும் அதன் பொருளாகும்.

தஜ்ஜாலிடம் இருந்து பாதுகாப்புப்பெற….

அல் கஹ்பு அத்தியாயத்தின் ஆரம்ப பத்து வசனங்களை மனனமிட்டுக் கொண்டவர் தஜ்ஜாலின் ஆபத்திலிருந்து பாதுகாக்கப்படுவார் என்று நபிகள் நாதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஆலிஹி வஸல்லிம் அவர்கள் கூறினார்கள். (ரியாழுஸ் ஸாலிஹீன் எண் 1021).

இன்னும் “யார் கஹ்ப் அத்தியாயத்தை வெள்ளிக்கிழமைகளில் ஓதி வருவாரோ அவர் தஜ்ஜால் வெளியேறினால் அவனிடமிருந்து இவர் பாதுகாப்பு பெறுவார்” என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஆலிஹி வஸல்லிம் அவர்கள் சொல்லித்தந்திருக்கிறார்கள் ( அல் அஹாதீதுல் முக்தாரா 2-50)

ஒவ்வொரு தொழுகையிலும் தஜ்ஜாலிடமிருந்து பாதுகாப்புபெற வேண்டிய பிரார்த்தனைகளையும் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஆலிஹி வஸல்லிம் அவர்கள் கற்றுத் தந்திருக்கின்றார்கள். உங்களில் ஒருவர் தமது தொழுகையில் இரண்டாவது அமர்வை முடிக்கும்போது நரக வேதனை, மண்ணறை வேதனை, வாழ்வு சாவு ஆகியவற்றின் சோதனை, தஜ்ஜாலுடைய தீங்கு ஆகிய நான்கில் இருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக்கொள்ளட்டும் என்று நபிகள் நாதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஆலிஹி வஸல்லிம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், அபூதாவூத், நசாயீ, இப்னு மாஜா, இப்னு அபீ ஷைபா 38617).

இந்த நபி மொழி நம்பகரமற்றது. அவ்வாறு வெள்ளிக்கிழமைகளில் இவ்வாக்கியத்தை ஓதுவது பித்அத்தான கருமமாகும் என்று சில தஜ்ஜால் ஜமாஅத் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள். தஜ்ஜாலின் குழப்பங்களிலிருந்து மக்கள் பாதுகாப்புப் பெறக்கூடாது என்பது இவர்கள நோக்கமாகும்.

தஜ்ஜால்கள் எல்லோரின் நோக்கங்களும் ஒன்றுதான். சத்திய விசுவாசிகள் அவமானப்படுத்தப்படுவர். (புஹாரி, முஸ்லிம்) என்றும் “முன்னோர்கள் பழிக்கப்படுவர்” (திர்மிதி).

இது தான் அவர்கள் செய்த பணி. இதுவும் தற்காலத்தில் கொடிகட்டிப் பறக்கிறது. இது ஒரு நவீன கண்டுபிடிப்பாகும்.

ஆங்ககிலயேர்களின் நவீன கண்டுபிடிப்புகளால் மக்களுக்கு பிரயோசனம் இருப்பது போல் பார்வைக்குத் தென்பட்டாலும், அவ்வாறு அவர்களால் விளம்பரம் செய்யப்பட்டாலும் அவர்களது ஒவ்வொரு கண்டுபிடிப்பாலும் சமுதாயம் பேரழிவை நோக்கித்தான் முன்னோக்கிச் செல்கிறது.

அதேபோல, இந்த வழிகெட்ட தஜ்ஜால் ஜமாஅத்துகளின் ஒவ்வொரு கருத்தும் மனிதனது ஈமானை மலட்டுத்தனமாக்குகின்றது.

அல்லாஹ்வின் மீதும் , அவனுடைய ரசூல் மீதும் , இறை நேசர்கள் எவ்வாறு ஈமான் கொண்டார்களோ, அதே ஈமான் நம் அனைவர்களின் மீதும் உரித்தாகட்டும், ஆமீன்.

நன்றி : Mohamed Ikramullah

Powered By Indic IME