அஸ்ஹாபுல் பத்ர்

அஸ்ஹாபுல் பத்ர்

 பத்ர் ஸஹாபாக்கள் தினம்

இஸ்லாமிய வரலாற்றில் மிகமுக்கிய ஓர் நிகழ்வாக பதர் போர் காணப்படுகின்றது. இந்நிகழ்வு புனித ரமழான் மாதத்தில் 17வது பிறையில் நடைபெற்றது. இஸ்லாத்தை பாதுகாப்பதற்காக தமது உயிரையும் துச்சமாக மதித்து, மிகக்குறைந்த அளவு ஆயுத பலத்துடனும், மிகப்பெரும் ஈமானிய பலத்துடனும் போராடிய ஸஹாபாத் தோழர்களின் வீரத்தியாகத்தை நினைவு படுத்துவது ஒரு முக்கியமான விடயமாகும்.

ஹிஜ்ரி 2ஆம் ஆண்டு ரமழான் மாதம் பிறை 17இல் எங்கள் அன்புக்குரிய ரஸூல்(ஸல்) அவர்களுடன் 313 ஸஹாபா தோழர்களும், எதிர்தரப்பில் சிறந்த முறையில் ஆயுதம்தரித்த 1000 குறைஷிக் காபிர்களும் போரிட்டனர். இஸ்லவாமிய வரலாற்றில் நடைபெற்ற முதலாவது இப்புனிதப்போரில், அல்லாஹ்வின் உதவியால் முஸ்லிம்கள் வெற்றிபெற்றனர்.

இப்புனித யுத்தத்தை பற்றி அல்லாஹுத்தஆலா புனித அல்குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
‘நீங்கள் உங்கள் இரட்சகனிடம் இரட்சிக்கத் தேடிய பொழுது, அணிஅணியாக உங்களோடு இணைந்து அடுத்து வரக்கூடிய ஆயிரம் மலக்குமார்களைக் கொண்டு நான் உங்களுக்கு உதவிசெய்வேன்’ என்று அவன் உங்களுக்கு பதிலளித்தான்.
(சூரா அன்பால்8:9)

பத்ர் யுத்தத்தின் போது, அல்லாஹுத்தஆலா மலக்குமார்களை இறக்கி முஸ்லிம்களுக்கு வெற்றியைக் கொடுத்தான். வானவர் தலைவர் ஜிப்ரீல்(அலை) அவர்கள் மலக்குமார்களின் குதிரைப் படைக்கு தலமை தாங்கினார். மலக்குமார்கள் செலுத்திய குதிரைகளின் பாதங்கள் நிலத்தைத் தொடவே இல்லை. ஜிப்ரீல்(அலை) அவர்கள் மஞ்சல் நிறத்தலைப்பாகை அணிந்திருந்தனர். ஏனைய மலக்குமார்கள் வெள்ளை நிறத் தலைப்பாகை அணிந்திருந்ததுடன், ஜிப்ரீல்(அலை) அவர்களை பின்தொடர்ந்து மலக்குமார்கள் ஒரு நீரோட்டம் போல் வந்தனர். பத்ர் ஸஹாபாக்கள் அன்று அந்த வீரதியாகத்தை செய்திருக்காவிட்டால் இன்று இஸ்லாம் நிலைத்திருக்காது.

இன்று இஸ்லாம் உலகம் முழுதும் பரவுவதற்கு அவர்கள் செய்த வீரத்தியாகம் முக்கிய காரணமாகும். இப்புனித யுத்தத்தில் 14 ஸஹாபாக்கள் ஷஹீதானர்கள். பத்ர் ஸஹாபாக்களின் அந்தஸ்து பற்றி ரஸூல்(ஸல்) பல இடங்களில் பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் பதர் யுத்தத்தில் கலந்துகொண்ட ஸஹாபி ஒருவர் செய்த தவறை மன்னித்தார்கள். மேலும், அந்த ஸஹாபியின் தவறை பற்றி பேசிய ஏனைய ஸஹாபாக்களுக்கு ‘அவர் பத்ர் யுத்தத்தில் கலந்துகொண்ட ஒருவர் அவரின் முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன எனவே அவரை குறை கூறாது விட்டுவிடுங்கள்’ என ரஸூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

எனவே, பத்ர் ஸஹாபாக்களின் சரிதையைப் படிப்போம், அவர்களை நினைவுகூறுவோம்.

Powered By Indic IME