இரும்பு

Iorn

இரும்பு – அல்லாஹ் விண்ணிலிருந்து இறக்கினான் , இது பற்றி குர்ஆன் தந்திருக்கின்ற விபரத்தை நீங்கள் அறிவீர்களா ?‘இரும்பையும் நாமே இறக்கினோம். அதில் மனிதர்களுக்கு பெரும் பயன்பாடுகளும் மிக்க வலிமைகளும் உண்டு’ -குர்ஆன் 57:25

மேற்கண்ட இந்த வசனம் மிகச்சிறந்த ஒரு அறிவியல் உண்மையை நமக்கு கூறிக் கொண்டிருக்கிறது. ஆகாயத்திலிருந்து மழைநீர் பொழிவதாக நாம் பார்த்திருப்போம். இரும்பு வானத்திலிருந்து பொழிவதை நாம் பார்த்ததில்லை. ஆனால் திருக்குர்ஆன் ஏழாம் நூற்றாண்டிலேயே ஆகாயத்திலிருந்து இரும்பு மழை பொழிவதைக் கூறிக் கொண்டிருக்கிறது. பூமியின் மீது விண்கற்கள் வந்து விழுவதை நாம் அடிக்கடிபத்திரிக்கை வாயிலாக படித்திருப்போம்.

இந்த விண்கற்களின் பெரும் பகுதி இரும்பும் சிலிக்கனும் ஆகும்.
சிலிக்கன் என்ற பெயரையோ, அப்படி ஒரு உலோகம் இருப்பது பற்றியோ முகமது நபி காலத்தில் தெரிந்திராத போதிலும் அந்த மக்கள் இரும்பின் தேவையைப் பற்றி நிறைய அறிந்தே வைத்திருந்தார்கள். இரும்பு என்பது பூமியிலிருந்து கிடைக்கக் கூடிய ஒரு தாதுப் பொருள் என்பது நமக்கு தெரியும். தாதுப் பொருட்கள் என்பது பூமியின் கட்டுமானப் பொருட்களே! எனவே பூமி படைக்கப்பட்டபோது இரும்பும் அதோடு சேர்ந்து இறைவனால் படைக்கப்பட்டாகி விட்டது. ஆனால் விண்ணிலிருந்து வரும் விண்கற்களில் உள்ள இரும்புக்கும் நாம் பயன்படுத்தும் இரும்புக்கும் சில வித்தியாசங்கள் இருக்கிறது.

நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்த உலோகங்களை விஞ்ஞானிகள் சோதனைக்கு உட்படுத்தினார்கள். அந்த மக்களின் உலோகங்களில் கசடுகளான கோபால்டு, சிலிக்கன் போன்றவை இருப்பது கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியம் அடைந்தனர். ஏனெனில் நாம் பயன்படுத்தும் சாதாரண இரும்புகளில் இந்த கசடுகள் சேர வாய்ப்பில்லை. விண்ணில் இருந்து விழுந்த கற்களைக் கொண்டே அந்த மக்கள் உலோகங்களை செய்திருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்தது. எனவேதான் இறைவன் நாம் விண்ணிலிருந்து இறக்கினோம். அதில் மனிதர்களுக்கு பெரும் பயன்பாடும் மிக்க வலிமைகளும் உண்டு எனக் கூறுகிறான்.
அடுத்து ஒரு வசனம்

‘வானத்தை நாம் பாதுகாக்கப்பட்ட கூரையாக ஆக்கினோம். அவர்களோ அதில் உள்ள சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர்.’
-குர்ஆன் 21:32

பூமிக்கு கூரை உண்டு. அந்த கூரை இல்லை என்றால் விண்கற்களின் தாக்குதலால் பூமியில் நாம் வாழ்வதே பிரச்னைக்குரியதாகி விடும். நமது பூமி சூரியனிலிருந்து மூன்றாவது கோளாகும். நான்காவது மற்றும் ஐந்தாவது கோள்கள் முறையே செவ்வாய் மற்றும் வியாழன் ஆகியவையாகும். இவ்விரு கோள்களுக்கிடையில் ஆயிரக்கணக்கான குறுங்கோள்களுடன் கோடானு கோடிக் கணக்கான விண்கற்கள் மிக அகலமான வட்டப் பாதை வழியாக சூரியனைச் சுற்றி வருகின்றன. அவை இவ்வாறு சூரியனைச் சுற்றி சுழன்று கொண்டிருக்கும் போது அவற்றுள் சில பாதை விலகி பூமிக்கு அருகில் வந்து விடுகின்றன. அப்போது அவை பூமியின் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு பூமியின் மீது விழுந்து விடுகின்றன எனக் கூறுகின்றனர் அறிவியலார்.

விண் கற்கள் பெரும்பாலும் சிற்றுருவம் கொண்டவையே ஆகும். அவை சிறு கூழாங் கற்களின் பருமனிலிருந்து மணற்துளி வரையிலானவைகளாகவே காணப்படுகின்றன. இருப்பினும் இவை அபரிமிதமான வேகம் கொண்டவைகளாக இருப்பதால் இதன் தாக்குதல் பூமிக்கு கூரை இல்லாதிருப்பின் மிக ஆபத்தாகவே முடியும். இவ்வளவு ஆற்றலுடைய இந்த விண்கற்கள் ஒரு நாளைக்கு 10 கோடிக்கும் அதிகமாக நம் பூமியின் மீது விழுகின்றன. ஆனால் அதைப் பற்றிய ஒரு சிறு பாதிப்பைக் கூட நமக்கு தராமல் இறைவன் நம்மைக் காப்பது அவனது கருணை அல்லவா! சரி.. இது எப்படி சாத்தியமாகிறது?
இதைப்பற்றி ஹைடன் பிளானிட்டோரியம் விஞ்ஞானிகள் தரும் விளக்கத்தைப் பார்ப்போம்.

‘ஒவ்வொரு நாளும் 100000000 -ஐவிட அதிகமாக பூமியின் மீது வீசப்படும் விண்கற்கள் இடை விடாத அருவி போன்று காற்று மண்டலத்தில் பொழிகின்றன. நமது பூமியைச் சூழ்ந்துள்ள காற்றுப் போர்வை இல்லாதிருப்பின் அவை பூமியின் தரைப் பகுதியை இடைவிடாத தாக்குதலுக்கு உள்ளாக்கி இருக்கும். விண் கற்கள் என அழைக்கப்படும் இவை காற்றில் ஏற்படும் உராய்வின் காரணமாக வெப்பப்படுத்தப்பட்டு உருகுகிறது. பிறகு எரிந்து சாம்பலாக மாற்றப்பட்டு காற்று மண்டலத்தில் அடையாளம் தெரியாதபடி தங்கி விடுகிறது’ -நியூ ஹேண்ட் புக் ஆஃப் ஹெவன்ஸ், பக்கம் 131

ஹைடன் பிளானட்டோரிய விஞ்ஞானிகள் தரும் இந்த விளக்கம் விண்கற்களை பூமியை தாக்க விடாமல் காற்று மண்டலம் எவ்வாறு தடுக்கிறது என்பதைக் கூறுகிறது. இந்த பூமியைச் சூழ்ந்துள்ள காற்று மண்டலம் நமக்கு கூரையாகச் செயல்படவில்லை என்றால் இங்கு எந்த உயிரினமும் வாழ்ந்திருக்க முடியுமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இது கூட ஒரு குறிப்பிட்ட தூரம் வரைதான் காற்று மண்டலம் கூரையாக செயல்படுகிறது. அதற்கு அப்பால் காற்று மண்டலம் கிடையாது. இந்த அறிவியல் அறிவு இல்லாத ஒருவரால் பூமிக்கும் கூரை உண்டு என்று சொல்லவே முடியாது. 14 ஆம் நூற்றாண்டில் அறிவியல் அறிவு அற்ற ஒரு சமூகத்தில் இந்த கருத்தை ஒரு மனிதரால் எப்படி சொல்ல முடிந்தது?

இவ்வளவு ஆதாரம் உள்ள ஒரு உண்மையை ‘உண்மை தி.க இதழ்’ எப்படி மறுக்கறது என்று பார்ப்போம்.

‘காற்று மண்டலத்தில் எரிக்கப்படும் விண்கற்கள் குண்டூசியின் கொண்டை அளவு பருமன் கொண்டவைகளே! இவ்வளவு சின்னஞ்சிறிய விண்கற்களை காற்று மண்டலம் தடுக்கா விட்டாலும் அதனால் ஆபத்து ஒன்றும் இல்லை. எனவே காற்று மண்டலத்தை பூமியின் கூரை என்று குறிப்பிட்டிருப்பது தவறு. திருக்குர்ஆனை இறை வேதம் என நிரூபிப்பதற்க்காக செய்யப்பட்ட அறிவியல் மோசடியே இது’ என்று உண்மை ஏடு எழுதியிருந்தது.

இந்த விமர்சனம் நமக்கு வேடிக்கையாக படவில்லையா?

‘விண்கற்களில் பெரும்பாலானவை மணற்துளியிலிருந்து சிறு கூழாங்கற்கள் வரையிலானவையாக இருந்த போதிலும் அவற்றுள் சில ஆயிரக்கணக்கான கிலோகிராம் எடை கொண்டவையாகும்.’ – நியூ ஹேண்ட் புக் ஆ.ப் ஹெவன்ஜ், பக்கம் 131

‘அரிசோனாவிலுள்ள கானன்டயபோலாவிற்கு அருகிலுள்ள ஒரு பெரும் குழி வானத்திலிருந்து விழுந்த ஒரு விண்கல்லால் உண்டானதாகும். இந்தக் குழி 570 அடி ஆழமும், 4200 அடி விட்டமும் கொண்டதாகும். இங்கு ஆறு மைல் சுற்றளவுக்கு பல விண்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இக்குழிகள் தோன்றி கிட்டத்தட்ட 5000வருடங்களாகின்றன. ஒவ்வொன்றும் பல டன்கள் எடை கொண்ட இரும்பைப் பிரதானமாகக் கொண்டவிண்கற்கள் ஆகும். 67 உலோகக் கற்க்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டன. அவை ஒவ்வொன்றும் அரை பவுண்டு எடை கொண்டவையாகும்.’ -அஸ்ட்ரானமி ஃபார் எவ்ரிமென், பக்கம் 252-253.

‘பூமிக்கு கூரை இருக்கின்ற நிலையிலேயே அரிசோனாவில் விழுந்த விண்கல் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்ப்படுத்தியது. ஒருக்கால் பூமிக்கு கூரை இல்லாதிருந்தால் நாம் பூமியில் வாழ்வது கேள்விக்குறியமதாகி இருக்கும்’ என்கிறார் அறிவியல் அறிஞர் டேவிட்சன்.
இப்போது ‘உண்மை’ என்ற பத்திரிக்கையின் வாதத்தை எடுப்பதா? அல்லது அறிவியல் அறிஞர்களின் ஆராய்ச்சி முடிவை ஒத்துக் கொள்வதா என்பதை படிப்பவர்களின் கவனத்துக்கே விட்டு விடுகிறேன்.
இவ்வளவு ஆதாரம் இருந்தும் இவர்கள் மறுப்பதற்கு ஒரு காரணமும் உண்டு. குர்ஆனின் வசனத்தை இன்னொரு முறை படியுங்கள்.

‘வானத்தை நாம் பாதுகாக்கப்பட்ட கூரையாக ஆக்கினோம். அவர்களோ(இறைமறுப்பாளர்களோ) அதில் உள்ள சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர்.’ – குர்ஆன் 21:32

உண்மை ஏடும் நமது நாத்திக நண்பர்களும் குர்ஆன் கூறும் அறிவியலை ஒத்துக் கொண்டால் ‘சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர்’ என்ற குர்ஆனின் வாக்கு பொய்ப்பிக்கப்பட்டு விடும். எனவே நாத்திகர்கள் இந்த உண்மைகளை தெரிந்து கொண்டே மறுப்பது குர்ஆன் இறை வேதம்தான் என்பதை நமக்கு தெளிவாக்கிக் கொண்டிருக்கிறது.
இது பற்றி நமது இணையதள நாத்திக நண்பர்களிடமிருந்து அறிவு பூர்வமான கருத்துக்களை எதிர்பார்ப்போம்.

-திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள் என்ற புத்தகத்தை தழுவி எழுதப்பட்டது

Powered By Indic IME